தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயை நோக்கிச் சரிந்து வருவது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும், தொழில்துறைக்கான டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வருங்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, சாதாரண மக்களும் சிறு குறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.தற்போது தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை உயர்த்திவிடும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எரிபொருள் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க மோடி அரசிடம் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை என்றும், இந்த விலை உயர்வுகள் சாமானிய மக்களின் வாழ்க்கையைத் தரம் தாழ்த்தும் என்றும் ராகுல் காந்தி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.