கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பிறந்த மக்காக் வகை குரங்கு குட்டி ஒன்று தனது தாயால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக மக்காக் வகை குரங்குகள் சில நேரங்களில் தனது குட்டிகளைப் பராமரிக்காமல் விடுவது வழக்கம் என்றாலும் இந்தப் பஞ்ச் குன் என்று பெயரிடப்பட்ட குட்டியை அதன் தாய் பல மாதங்களாகத் தொடர்ந்து நிராகரித்து வந்தது. இதனால் தனிமையில் வாடிய இந்தக் குட்டிக்குத் துணையாகப் பூங்கா ஊழியர்கள் ஆரஞ்சு நிறத்திலான ஒரு பொம்மையைப் பரிசாக வழங்கினர்.
அந்தப் பொம்மையையே தனது தாயாகக் கருதிய பஞ்ச் குன் தான் செல்லும் இடமெல்லாம் அதனைத் தூக்கிச் சென்றதுடன் அதனைக் கட்டியணைத்தபடி உறங்கி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் கண்கலங்க வைத்தன.
தாய்ப்பாசத்திற்காக ஏங்கிய இந்தக் குட்டி குரங்கின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இந்தப் பஞ்ச் குன் குட்டியைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர். அந்த வீடியோவில் பொம்மையைத் தனது தாயாகப் பாவித்து அதனுடன் விளையாடுவதும் அதன் மீது படுத்துக் கொள்வதுமாக இருந்த பஞ்ச் குன்னின் நிலை விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
எட்டாவது மாதங்கள் வரை அந்தப் பொம்மையையே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்த இந்தக் குட்டிக்குத் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பஞ்ச் குன் மீண்டும் தனது இனத்தைச் சேர்ந்த குரங்குகளின் கூட்டத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
தற்போது இந்தப் பஞ்ச் குன் என்ற குட்டி குரங்கு மோமோ சான் என்ற பெண் குரங்குடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. பொம்மையை மட்டுமே துணையாகக் கொண்டு தனிமையில் தவித்து வந்த அந்தப் பஞ்ச் குன்னிற்கு இப்போது ஒரு உண்மையான உறவு கிடைத்துள்ளது அதன் மன அழுத்தத்தைப் போக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் தனிமையில் வாடிய வீடியோக்களைப் பார்த்து வருத்தமடைந்த பலருக்கும் பஞ்ச் குன் தற்போது தனது கூட்டத்தோடு உற்சாகமாக விளையாடி வரும் செய்தி மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான மாற்றம் விலங்குகள் மத்தியிலும் அன்புக்கும் நட்புக்கும் உள்ள முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
