“பெண்களை இழிவுபடுத்தி கைதட்டல் வாங்க நினைக்காதீர்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசின் ‘உங்கள் கனவு’ திட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து, நடிகை நயன்தாராவின் பெயரை இழுத்து சி.வி. சண்முகம் பேசிய அநாகரிகமான பேச்சு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ள விஷால், “சினிமா துறையில் இருக்கும் பெண்கள் ஒன்றும் பொதுச்சொத்து அல்ல. ஒரு பெண்ணை, ஒரு இல்லத்தரசியை இப்படி அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்கவே முடியாது. ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் கீழ் பணியாற்றிய நீங்கள், இப்படித் தரம் தாழ்ந்து பேசுவது உங்கள் சுயமரியாதையையே இழக்கச் செய்யும் செயல். இனி இதுபோன்ற தவறுகளைச் செய்ய வேண்டாம்” என நேரடியாகவே எச்சரித்துள்ளார். ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்த நிலையில், விஷாலின் இந்த ‘பஞ்ச்’ பதிலடி அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
