நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணியின் பணபலத்தைக் கடுமையாகச் சாடினார். “திமுகவிடம் தற்போது 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் இருக்கலாம். ஆனால், எவ்வளவு பெரிய பணபலம் இருந்தாலும் இந்தியாவை டாட்டாவோ அல்லது பிர்லாவோ ஆள முடியாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்ற திமுக முயற்சிப்பதாகவும், ஆனால் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், வெறும் பணபலத்தை வைத்து மட்டும் ஒரு கட்சியால் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்றும், மக்கள் மனம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் அரசியலில் மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டார். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மக்கள் இப்போது மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவித்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
