நாட்டில் 5G சேவைகள் இன்னும் முழுமையாக விரிவடைந்து வரும் நிலையிலேயே, அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்பமான ‘6G’ நோக்கி இந்தியா தனது அதிரடிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. ‘பாரத் 6G விஷன்’ (Bharat 6G Vision) திட்டத்தின் கீழ், 104 புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் ரூ.271 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவை உலக நாடுகளுக்கு இணையாகவும், முன்னோடியாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள 5G நெட்வொர்க்கில் நொடிக்கு சுமார் 10 Gbps வரை இணைய வேகம் கிடைக்கிறது. ஆனால், வரவிருக்கும் 6G தொழில்நுட்பம் நொடிக்கு 1 டெராபிட் (1 Tbps) வரை வேகத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இது 5G-யை விட பல மடங்கு அதிவேகமானதாகும்.

இந்த 6G திட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களான டெராஹெர்ட்ஸ் (THz) தகவல் தொடர்பு, சிக்னல் பரிமாற்றத்தை மேம்படுத்த உதவும்.  மேம்பட்ட சிப்செட் வடிவமைப்பு மூலம் உள்நாட்டிலேயே ஹார்டுவேர் தயாரிப்புகளை ஊக்குவிக்க முடியும். இன்டெலிஜென்ட் ரிஃப்ளெக்டிவ் சர்பேஸ்: சிக்னல் வலிமையை பல மடங்கு அதிகரிக்க உதவும்.

இந்த மெகா திட்டத்தில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் பல வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. இதன் மூலம் கல்வி மற்றும் தொழில் துறை இடையிலான பிணைப்பு வலுப்படும்.

6G என்பது வெறும் இணைய வேகம் மட்டுமல்ல, அது வாழ்க்கை முறையையே மாற்றப்போகிறது. ஹோலோகிராபிக் கம்யூனிகேஷன்: முப்பரிமாண (3D) முறையில் நேரில் பேசுவது போன்ற உரையாடல்கள் சாத்தியமாகும். மருத்துவத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் துல்லியமாக நடைபெறும். தானியங்கி வாகனங்களின் இயக்கம் மேம்படும். விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கற்களை எட்ட உதவும்.

“இந்தியா இனி இறக்குமதி செய்யும் நாடாக இருக்காது; 6G தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும்,” என மத்திய அரசு நம்பிக்கைதெரிவித்துள்ளது.