திரையுலகின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘டால்பி’ திரையரங்கில் திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

உலகெங்கும் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், கலைக்கான இந்த விழாவிற்கு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞர் கோனன் ஓ’பிரையன் இந்த விழாவைத் தனது நையாண்டிப் பேச்சால் கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார்.

இயக்குநர் ரயான் கூக்ளர் இயக்கத்தில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது.

அதன்படி சிறந்த அசல் திரைக்கதை: இப்படத்திற்காக இயக்குநர் ரயான் கூக்ளர் விருதைப் பெற்றார். சிறந்த அசல் இசை: இப்படத்திற்கு இசையமைத்த லுட்விக் கோரான்சன் தனது 3-வது ஆஸ்கர் விருதை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதற்கு முன் ‘பிளாக் பாந்தர்’, ‘ஓப்பன்ஹெய்மர்’ படங்களுக்காக இவர் விருது பெற்றுள்ளார்.

இப்படத்திற்காக ஆட்டம் டூரால்ட் அர்காபா, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றார். ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவு பிரிவில் விருது பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படம் தொழில்நுட்பம் மற்றும் நடிப்புத் துறையில் முத்திரை பதித்தது .கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் 11 முறை பரிந்துரைக்கப்பட்டு முதல் முறையாக இயக்குனர் பால் ஆண்டர்சன் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த துணை நடிகர்: இப்படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்திய சீன் பென் இவ்விருதை வென்றார். சிறந்த படத்தொகுப்பு: இப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்காக படத்தொகுப்பாளர் ஆண்டி ஜர்கென்சன் விருது பெற்றார்.

இதுதவிர சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ எதிர்பார்த்தபடியே இந்த விருதை வென்றது.

சிறந்த துணை நடிகை: ‘வெப்பன்ஸ்’ படத்தில் நடித்த ஏமி மேடிகன் இவ்விருதைப் பெற்றார்.

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: நார்வே நாட்டின் உணர்ச்சிகரமான டிராமா படமான ‘சென்டிமென்டல் வேல்யூ’ (Sentimental Value) விருதை வென்றது. இயக்குநர் ஜோகிம் ட்ரையர் இப்போட்டியில் இருந்த ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ உள்ளிட்ட படங்களைப் பின்னுக்குத் தள்ளி மகுடம் சூடினார்.

சிறந்த ஆவணப்படம்: ரஷ்ய அரசியல் சூழலை விளக்கும் ‘மிஸ்டர் நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்’ சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த ஒலி அமைப்பு: ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் உருவான ‘F1’ திரைப்படம் சிறந்த ஒலிக்கான விருதைப் பெற்றது.

கலை மற்றும் ஆடை வடிவமைப்பு: ‘ஃபிராங்கண்ஸ்டைன்’ திரைப்படம் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் விருதுகளை வென்றது.

இந்த ஆண்டு ஆஸ்கர் வரலாற்றில் 7-வது முறையாக ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடந்தது. ‘சிறந்த அதிரடி குறும்படம்’ பிரிவில் ‘தி சிங்கர்ஸ்’ மற்றும் ‘டு பீபுள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா’ ஆகிய இரண்டு படங்களுக்கும் விருது சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ‘கே பாப் டிமன் ஹண்டர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.