டி20 உலகக் கோப்பையை வென்ற 24 மணி நேரத்திற்குள், இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்றது குறித்து முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோருடன் அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்றார். அங்கு உலகக் கோப்பையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

கடந்த 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் வீரரும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.-யுமான கீர்த்தி ஆசாத், இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்டதாவது: “இந்திய அணி மீது எனக்கு அவமானமாக இருக்கிறது. 1983-இல் கபில்தேவ் தலைமையில் நாங்கள் கோப்பையை வென்றபோது, அணியில் இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் இருந்தோம். கோப்பையை நமது தாய்நாட்டிற்கு கொண்டு வந்தோமே தவிர, மதரீதியான இடங்களுக்குக் கொண்டு செல்லவில்லை.

 

இந்த உலகக் கோப்பையை ஏன் கோயிலுக்கு மட்டும் இழுத்துச் செல்கிறீர்கள்? ஏன் மசூதிக்குக் கொண்டு செல்லவில்லை? ஏன் தேவாலயம் அல்லது குருத்வாராவிற்கு கொண்டு செல்லவில்லை? இந்திய அணி 140 கோடி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறதே தவிர, சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய் ஷாவின் குடும்பத்தை அல்ல. முகமது சிராஜ் ஏன் மசூதிக்குக் கொண்டு செல்லவில்லை? தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் ஏன் தேவாலயத்திற்கு கொண்டு செல்லவில்லை? இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் வெற்றி அல்ல என்று கூறியுள்ளார்.


மேலும் உலகக் கோப்பையுடன் கோயிலுக்குச் செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அப்போது உலகக் கோப்பைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.