டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் அல்லது ரிங்கு சிங்கை களம் இறக்க வேண்டும் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அவர் அட்வைஸ் செய்துள்ளார். அபிஷேக் சர்மா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறி வருவதாகவும், இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே 50 ரன்களைத் தாண்டியுள்ளதாகவும் கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்றும், 8000-க்கும் அதிகமான டி20 ரன்களைக் குவித்துள்ள சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களே இறுதிப்போட்டிக்கு சரியான தேர்வாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக தவிக்கும் அபிஷேக் சர்மாவைத் தூக்கிவிட்டு, இந்திய அணி ‘வின்னிங் காம்பினேஷனை’ மாற்றுமா என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.