தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் சமீபத்திய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிச்சயம் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்று அதிரடியாகக் கணித்துள்ளார்.
மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், அதிமுகவிற்கு இதுவே கடைசித் தேர்தலாக அமையும் என்றும் அவர் ஜோதிடம் கூறியுள்ளார். திராவிட அரசியலில் தடம் பதித்துள்ள அதிமுகவை ஒரு புதிய கட்சி பின்னுக்குத் தள்ளும் என்ற ஜோதிமணியின் இந்த கணிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஜோதிமணியின் இந்த விமர்சனம் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜகவை நோக்கித் திரும்பியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் பாரம்பரிய இருமுனைப் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் கட்சி இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெற்று வரும் ஆதரவு, அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பது ஜோதிமணியின் கருத்தாக உள்ளது.
அதே வேளையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் மேலாக இருக்கும் நிலையில், ஜோதிமணியின் இந்த அரசியல் கணிப்பு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
