இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் அதன் தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக உழைக்கும் மக்களின் நலன் கருதி தரமான கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சூறையாடும் கனிமக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் மற்றும் நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர் நலன் மற்றும் மாநில உரிமைகள் குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கச்சத்தீவை மீண்டும் இந்தியா வசம் பெற வேண்டும் என்றும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை நிரந்தரமாகத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து மன்சூர் அலிகான் ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
