சனாதனம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, ‘இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தார்’ எனத் திரித்துப் பரப்பியதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அமித் மாளவியா மீதான புகாரை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

​உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் போதிய முகாந்திரம் இல்லை என்றும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தவறான தகவலைப் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சைத் தவறாகச் சித்தரித்த விவகாரத்தில் அமித் மாளவியாவுக்கு வழங்கப்பட்ட இந்த ‘நிவாரணம்’ செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.