அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கழுத்தில் தென்பட்ட சிவப்பு நிறத் தழும்பு தற்போது உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவரது கழுத்தின் வலதுபுறம் இந்த அடையாளம் தெளிவாகத் தெரிந்ததால், 79 வயதான அவரது உடல்நிலை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கமளித்த வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் பார்பெல்லா, இது ஒரு சாதாரண தோல் சிகிச்சைக்காக (Skin Treatment) பயன்படுத்தப்படும் கிரீமினால் ஏற்பட்ட தழும்புதான் என்றும், அடுத்த சில வாரங்களில் இது மறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ட்ரம்பிற்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், தோல் தொடர்பான பாதிப்புக்காக அவர் ‘மொமடசோன்’ (Mometasone) எனும் கிரீமைப் பயன்படுத்துவது ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய சிகிச்சையும் அதன் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வயதில் அதிபர் பதவியேற்றவர் என்பதால், ட்ரம்பின் ஆரோக்கியம் மற்றும் அவரது ஒவ்வொரு அசைவும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
