ஐ.பி.எல். 2026 சீசன் அடுத்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக இந்நேரம் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சென்னை, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற அணிகளின் சொந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, அதற்கேற்ப முழுமையான போட்டி அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடந்த 2009, 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொதுத்தேர்தல் நடந்தபோது, ஐபிஎல் அட்டவணை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதேபோல இந்த முறையும் தேர்தலை முன்னிட்டு அட்டவணையைப் பிரித்து வெளியிடுவதா அல்லது தேர்தல் தேதி வரும் வரை காத்திருப்பதா என்பது குறித்து பிசிசிஐ விரைவில் இறுதி முடிவு எடுக்கவுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
