கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது முதலே, அவர் திமுகவில் இணையப்போகிறார் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன.

குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், “முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக வருவார்” என்று சட்டமன்றத்தில் பேசியதோடு, “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசியுடன் இது நடக்கும்” என்று கூறியது திமுக தரப்பையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு வரும் தேர்தலில் திமுக சார்பில் சீட் வழங்கப்படலாம் என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஓபிஎஸ்-க்கு “சபாநாயகர்”பதவி வழங்கப்படலாம் என்றும் தமாகா நிர்வாகி முனவர் பாஷா உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, திமுக மேலிடம் ஓபிஎஸ்-ஸை ஒரு புதிய கட்சியைத் தொடங்கி கூட்டணியில் இணையுமாறு அல்லது நேரடியாகக் கட்சியில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதற்குப் பதிலாகத் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஒரு தொகுதியை அவருக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், “கடைசி வரை அதிமுக-வை மீட்டெடுப்பதே என் லட்சியம்” என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது நிலவும் நெருக்கடி காரணமாகத் திமுக-வின் பக்கம் சாயும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுவது அதிமுக (இபிஎஸ் அணி) மற்றும் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.