திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி எம்.பி-யை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடனிருந்தார். கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ கேட்கப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

​சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், “நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தற்போது விவாதிக்கவில்லை” என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் (Rajya Sabha) தேர்தல் இடங்கள் குறித்தே விரிவாகப் பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.