நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியைக் கிண்டல் செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப், முகமது அமீரின் விமர்சனங்களே இந்திய அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 187 ரன்களைக் குவித்தது. 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில் 18.5 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: “அமீர், நீ ஒரு ஆபத்தானவன்! முன்பு மைதானத்தில் இந்திய வீரர்களைத் திணறடித்தாய்; இப்போது ஸ்டூடியோவில் அமர்ந்து கொண்டு அவர்களைப் பதற்றமடையச் செய்கிறாய். ஏற்கனவே விமர்சனங்களில் சிக்கியுள்ள அவர்களை கொஞ்சம் மூச்சு விட விடு!” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டத்தைப் பாராட்டிய அவர், அந்த அணியின் பின்வரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஒழுக்கம் அபாரமாக இருந்ததாகத் தெரிவித்தார். முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை ‘வெறும் ஸ்லாக் பேட்டர்’ (Slogger) என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“இந்த உலகக் கோப்பையில் இந்தியாவால் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாது; இந்தியாவை விட தென்னாப்பிரிக்காவே சிறந்த அணி” என்று அமீர் கூறியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.