ஒடிசா மாநிலத்தில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மணப்பெண்ணை, மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் இன்று காலை முறைப்படி திருமணம் நடைபெற்றது. சடங்குகள் முடிந்த நிலையில், மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் மணமகன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களது வாகம் சென்று  கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை வழிமறித்தனர். திகைப்படைந்த உறவினர்கள் சுதாரிப்பதற்குள், அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளைக் காட்டி அனைவரையும் மிரட்டினர். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உறவினர்கள் உறைந்து நின்ற வேளையில், மணப்பெண்ணை மட்டும் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். சில நிமிடங்களில் அரங்கேறிய இந்த சினிமா பாணி கடத்தல் சம்பவத்தால் மணமகன் தரப்பினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இது குறித்து மணமகன் ஹரிபந்து பட்டேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், கடத்தப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் தான் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடத்தப்பட்ட பெண்ணையும், கடத்தல் கும்பலையும் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் மணமேடை ஏறிய சில மணிநேரத்திலேயே மணப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.