விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று (பிப்.20) நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவிருக்கும் தேர்தல் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து தங்களுக்குக் கூட்டணி அழைப்பு வந்ததாக முதன்முறையாக மேடையிலேயே போட்டுடைத்தார். இந்தத் தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அந்த அழைப்பைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திமுக கூட்டணியிலேயே தொடரப்போவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “நான் உள்வாங்கிய அம்பேத்கரிய அரசியலும், மார்க்சியமும் தான் இந்த முடிவுக்குக் காரணம்; வலதுசாரி சக்திகளான பாஜக போன்ற கட்சிகள் வலுப்பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் முழங்கினார். விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் அதிர்வை ஏற்படுத்தினாலும், தனது கொள்கைப் பிடிப்பே தனக்கு முக்கியம் என்பதைத் திருமாவளவன் இந்த உரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
