ஹைதராபாத் அருகே உள்ள ஹபிஸ்பேட்டை ரயில் நிலையம் அருகே, லத்தூரைச் சேர்ந்த இம்ரான் பாபு சையத் (32) என்ற முஸ்லிம் இளைஞர், சுமார் 20 ரயில்வே ஊழியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா-ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அவர், தனது பொதுப் பெட்டிக்கு மாற முயன்றபோது, அங்கிருந்த ஏசி கோச் ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தித் தாக்கத் தொடங்கியுள்ளனர். அவரது தாடியைப் பிடித்து இழுத்து, தலையில் இருந்த தொப்பியை வீசி எறிந்து, அவரது மத அடையாளத்தை வைத்து இழிவாகப் பேசித் தாக்கியதாகப் பாதிக்கப்பட்டவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் இம்ரானுக்கு வாயில் ரத்தம் வரும் அளவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரைத் தடுக்க வந்த அவரது நண்பர்களையும் அந்த கும்பல் விட்டுவைக்கவில்லை. அவர்களது செல்போன் மற்றும் சுமார் 47,000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. ரயில்வே போலீசாரிடம் உதவி கேட்டும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பீதர் ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது போலீசார் அவரை வலுக்கட்டாயமாக ரயிலுக்குள் தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.