உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவர்களின் தந்தையின் கடந்த கால வாழ்க்கை குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சேத்தன் குமார் என்பவரின் மகள்கள் நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகியோர் கடந்த புதன்கிழமை அதிகாலை 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர், சேத்தன் குமாரின் கடந்த காலத்தை ஆய்வு செய்தபோது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் கூரையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அப்போது அது தற்கொலை என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டது. தற்போது மகள்களின் தற்கொலைக்கும், தந்தையின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் அந்த பழைய வழக்கை மீண்டும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

விசாரணையில் சேத்தன் குமாருக்கு சுஜாதா, ஹீனா, டீனா என்ற மூன்று மனைவிகள் இருப்பதும், அவர்கள் மூவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த மகள்களில் நிஷிகா முதல் மனைவிக்கும், பிராச்சி மற்றும் பாகி இரண்டாவது மனைவிக்கும் பிறந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

பங்குச்சந்தை தரகரான சேத்தன் குமாருக்கு ரூ.2 கோடி வரை கடன் இருந்ததாகத் தெரிகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தக் கூட பணமில்லாமல், தனது மகள்களின் செல்போன்களை அவர் விற்றுள்ளார். போதிய பணமில்லாத காரணத்தாலும், படிப்பில் ஆர்வம் குறைந்ததாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை.

சிறுமிகள் எழுதிய 8 பக்க டைரி குறிப்புகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தங்களுக்கு கொரிய கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு மீது இருந்த அதீத ஈடுபாட்டை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறுமிகள் கொரிய மொழி பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக்கொண்டு, ஆன்லைனில் கொரிய நபர்களைப் போலவே வலம் வந்துள்ளனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் டாஸ்க் விளையாட்டில் அவர்கள் மூழ்கியிருந்ததும், அதன் இறுதி கட்டமாகவே தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

செல்போன்களை தந்தை பிடுங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் துணை போலீஸ் கமிஷனர் நிமிஷ் பாட்டீல் கூறுகையில், “தந்தையின் வாக்குமூலங்கள் மற்றும் சிறுமிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்,” என்றார்.