குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது திணிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான உடல் ரீதியான சித்திரவதையே இந்தக் கொலைக்குக் காரணம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 37 வயது பெண்ணின் கணவர் மும்பையில் கூலி வேலை செய்து வந்தார். மாதம் ஒருமுறை மட்டுமே சூரத் வந்து செல்லும் அவர், ஆண்மை அதிகரிக்கும் (Sex Power) மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டுத் தனது மனைவியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான உடல் வலியாலும், மன உளைச்சலாலும் ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த ஜனவரி 1-ம் தேதி, மஞ்சள் பாலில் எலி மருந்தைக் கலந்து கணவருக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் உயிர் தப்பிவிட்டார். ஜனவரி 5-ம் தேதி, ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கணவரை, தனது கைகளாலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் அந்தப் பெண்.
கொலைக்கு பின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக அந்தப் பெண் நாடகமாடினார். ஆனால், அவரது மைத்துனர் (கணவரின் தம்பி) சடலத்தைப் பீகாருக்குக் கொண்டு செல்ல விரும்பியபோது, இந்தப் பெண் அதற்கு முட்டுக்கட்டை போட்டு சூரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தார்.
இதனால் சந்தேகமடைந்த மைத்துனர் போலீசில் புகார் அளித்தார். பிரேதப் பரிசோதனையில் உடலில் விஷம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டதும் உறுதியானதால், போலீசார் அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்தனர்.
