தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் நேர்முக உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய் பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, சுமார் ஓராண்டுக்கு முன்னரே அவரைத் தனது குழுவிலிருந்து அமைச்சர் பி.டி.ஆர் நீக்கியிருந்தார். இருப்பினும், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மதுரை மாநகராட்சி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஜெய் பாலாஜி மெகா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் கைது நடவடிக்கை மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அமைச்சரின் செல்வாக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பலரிடமும் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. “கறார்” பேர்வழி என்று பெயரெடுத்த அமைச்சரின் பெயரையே பயன்படுத்தி அவரது முன்னாள் உதவியாளரே இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது, பி.டி.ஆர் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. பி.டி.ஆர் ஏற்கனவே இவரைத் தள்ளி வைத்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது ஜெய் பாலாஜியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.