வேலை தேடும் நபர்கள் நீண்ட நேர்காணல் முறைகளால் சந்திக்கும் மன உளைச்சல் குறித்து ரெடிட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு நிறுவனத்தில் 4 கட்ட நேர்காணல்களை வெற்றிகரமாக முடித்த ஒருவருக்கு, இறுதியில் அந்த வேலை கிடைக்கவில்லை என மின்னஞ்சல் வந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வரை சென்று நேர்காணல் நடந்த நிலையில், அந்த நேர்காணலின் போது அவர் பேசிய விதம் தனக்கு வேலை கிடைத்துவிட்டது போன்ற உறுதியைத் தந்ததாக அந்த நபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நேர்காணலுக்குப் பிறகு தான் அனுப்பிய நன்றி தெரிவிக்கும் கடிதத்திற்கும் அந்த நிறுவனத் தரப்பிலிருந்து மிகுந்த பாராட்டு கிடைத்த போதிலும், இறுதியில் உங்களை விட அதிக அனுபவம் உள்ள வேறொருவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்ற பதில் வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பலரும், ஒரு நிறுவனத்திலிருந்து பணி நியமன ஆணை கையில் கிடைக்கும் வரை வேலை கிடைத்துவிட்டதாக யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.
இந்த ரெடிட் பதிவின் கீழ் கருத்து பகிர்ந்துள்ள மற்றொருவர், தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குப் பெயர்ந்து சென்ற பிறகு, மூன்றே வாரங்களில் வேலை பறிபோன கதையைக் குறிப்பிட்டுள்ளார். முதல் நாள் வேலைக்குச் சென்ற போது நிர்வாகத் தரப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
வேலையில் சேரும் வரை நிறுவனங்கள் காட்டும் அதீத ஆர்வம் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு கனவைப் போன்றது என்றும், உண்மை நிலை வேறாக இருக்கலாம் என்றும் பல பயனர்கள் தங்கள் கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
