பெண்களைப் பார்த்துத் தவறான நோக்கில் கண்ணடிப்பதும், ‘பிளையிங் கிஸ்’ (Flying Kiss) கொடுப்பதும் சட்டப்படி பாலியல் தொல்லைதான் எனச் சண்டிகர் நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, 61 வயது முதியவர் ஒருவர் தன்னை நோக்கி ஆபாச சைகைகள் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முதியவரைக் குற்றவாளி என அறிவித்துத் தீர்ப்பளித்தது. நீதிபதி தனது தீர்ப்பில், “ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவருக்குப் பாலியல் ரீதியான சைகைகளை வெளிப்படுத்துவதும், கண்ணடிப்பதும் அவரது கண்ணியத்தைக் குலைக்கும் செயலாகும்; இது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பு, பொது இடங்களில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
