அரியானா மாநிலம் பரீதாபாத்தில் காசநோயால் உயிரிழந்த 35 வயதுப் பெண்ணின் சடலத்தை, ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த வசதியின்றி அவரது குடும்பத்தினர் தள்ளுவண்டியில் வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அனுராதா என்ற அந்தப் பெண் பாட்ஷா கான் அரசு சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 700 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். காசநோய் சிகிச்சைக்காகத் தங்களது சேமிப்பு முழுவதையும் இழந்த அந்த ஏழ்மைக் குடும்பத்தினர், அத்தொகையைச் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

இறுதியில் வேறு வழியின்றி, பெண்ணின் தாத்தா தள்ளுவண்டியை ஓட்டிச் செல்ல, அவரது 7 வயது மகன் சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த துணி காற்றில் பறக்காமல் இருக்க அதனைப் பிடித்துக்கொண்டே தள்ளுவண்டியில் அமர்ந்து சென்றுள்ளார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்தத் துயரப் பயணம் தொடர்ந்தது.

இந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு கூட அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியே அவரது குடும்பத்தினர் செலவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், அரசு ஆம்புலன்ஸ்கள் சடலங்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்றும், தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.