“வறுமை ஒரு பக்கம் வாட்டினாலும், குடும்பத் தகராறு ஒரு உயிரையே பறித்துவிடும்” என்பதற்குச் சாட்சியாக பெங்களூரு நெலமங்களா பகுதியில் ஒரு துயரம் நடந்துள்ளது.
பியாதரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமா (30) – சந்திரசேகர் தம்பதிக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. கூலி வேலை செய்து பிழைக்கும் இவர்கள், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
சுமா மகளிர் சுய உதவிக்குழு ஒன்றில் கடன் வாங்கியிருந்தார். அதன் வாரத் தவணையைக் கட்டுவதற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து ₹1,300 பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், அந்தப் பணத்திலிருந்து கணவர் சந்திரசேகர் தனது சொந்தச் செலவிற்காக ₹200-ஐ எடுத்துள்ளார். இதையறிந்த சுமா, “கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை எப்படிக் கேட்காமல் எடுக்கலாம்?” என்று கணவரிடம் சண்டையிட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் வேலைக்குச் சென்ற பிறகு மனமுடைந்த சுமா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த சந்திரசேகர், தனது மனைவி சடலமாகத் தொங்குவதைக் கண்டு கதறித் துடித்தார். வெறும் 200 ரூபாயால் இரண்டு குழந்தைகள் தாயை இழந்த சம்பவம் அந்த ஊரையே நிலைகுலையச் செய்துள்ளது.
