மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது தரப்பு வேட்பாளரைத் தோற்கடிப்பவருக்கு ரூ.71 லட்சம் வழங்கப்படும் என சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்.எல்.ஏ. பேசியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் உள்ள கலாம்நுரி தொகுதியின் சிவ சேனா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சந்தோஷ் பாங்கர். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருபவர். இந்நிலையில், ஹிங்கோலியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அங்கிருந்த மல்யுத்த வளையத்திற்குள் (Wrestling Ring) இறங்கிப் பேசினார்.

 

View this post on Instagram

 

A post shared by Lokmat (@lokmat)

அப்போது அவர் கூறியதாவது: “வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் சஞ்சய் கோட்கே என்பவரை வேட்பாளராக நான் முன்னிறுத்தியுள்ளேன். அவரைத் தேர்தலில் யாராவது தோற்கடித்தால், அவர்களுக்கு நான் 71 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கத் தயாராக இருக்கிறேன்.”

தனது வேட்பாளரின் வெற்றியில் தனக்குள்ள அதீத நம்பிக்கையை வெளிப்படுத்த அவர் இவ்வாறு சவால் விடுத்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை. இருப்பினும், ஒரு மக்கள் பிரதிநிதியே பகிரங்கமாகத் தேர்தலில் வெற்றி-தோல்வி குறித்துப் பணம் தருவதாகப் பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. தேர்தலுக்கு முன்பே இத்தகைய கருத்துகளைப் பரப்புவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.