திருப்​பரங்​குன்​றம் ஒன்​றிய திமுக முன்னாள் செய​லா​ள​ராக இருந்​த கார்த்​தி​கேயன், அக்கட்சியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலை​யில் இன்று தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்​டார்.

பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது பேசிய அவர், திருப்​பரங்​குன்​றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற நீதி​மன்ற உத்​தரவை திமுக அரசு நிறை வேற்​றத் தவறியதால், தான் மிகுந்த மன உளைச்​சலில் இருந்​ததாகக் குற்றம் சாட்டினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு திமுக ஒன்​றியச் செய​லா​ள​ராகப் பணியாற்றிய இவர், பின்​னர் உட்​கட்​சித் தேர்​தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்​சிப் பணி​களில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்துள்ளார். மதுரையின் முக்கியப் பகுதியில் திமுக-வின் செல்வாக்கு மிக்க நிர்வாகியாக இருந்த ஒருவர் தவெக-வில் இணைந்திருப்பது, அப்பகுதி திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.