சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியர் குளிப்பதை, அங்கிருந்த ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் தனஞ்செய்பதி (19) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அந்த பெண், ஜன்னல் ஓரம் யாரோ நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதுடன், சுதாரித்துக் கொண்டு வெளியே வந்து அந்த ஊழியரின் செல்போனை பிடுங்கி சோதனை செய்துள்ளார்.
அதில் அப்பெண்ணின் வீடியோ அழிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே வேறு பல பெண்கள் குளிக்கும் ஆபாச வீடியோக்கள் பதிவாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த காமுக ஊழியரை கம்பி எண்ண வைத்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் விடுதிகளில் தங்கும் பெண்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
