அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கார்டி பிருவா (43). இவரது மனைவி மிரா பிருவா (33). இந்த தம்பதியினர் நீண்ட நாட்களாக மாந்திரீகத்தில் ஈடுபட்டு வருவதாக அந்த கிராம மக்கள் இடையே பலத்த சந்தேகம் இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், நேற்று நள்ளிரவு ஒன்று திரண்டு கார்டி பிருவாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கும்பல், தம்பதி இருவரையும் வீட்டு வாசலிலேயே வைத்து கொடூரமாகத் தாக்கி, அவர்கள் மீது தீ வைத்தனர்.

இதில் உடல் கருகி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாம்பலாகிக் கிடந்த தம்பதியின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூடநம்பிக்கையால் நடந்த இந்த இரட்டைப் படுகொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஊரை விட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.