மும்பை புறநகர் பகுதியில், 6 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனந்தா (30) என்பவரின் கணவர் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்தச் சிறுமிக்கு சிறு வயதிலிருந்தே பேசுவதில் சிரமம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது தந்தை சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. சிறுமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தாயார் சுனந்தா தெரிவித்தார்.
இருப்பினும், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் தாயார் சுனந்தாவை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், தனது மகளைக் கொலை செய்ததை சுனந்தா ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில், ‘‘மகள் சரியாக மராத்தி பேசவில்லை என்பதால் மன அழுத்தத்தில் கொலை செய்தேன்’’ என அவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற மன அழுத்தம், மகள் பேசுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மனநலப் பிரச்னைக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தது போன்ற காரணங்களால் இந்த கொலை நடந்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதையடுத்து சுனந்தாவை போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
