புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. பாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி வியாழக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இருமுறை வெற்றி பெற்ற அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நீடித்து வந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்ட பாஸ்கர், அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் முன்னிலையில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், தற்போது பாஸ்கர் பாஜகவில் இணைந்துள்ளது புதுச்சேரி மாநில அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.