ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய தவெக தலைவர் விஜய், அரசியல் களத்தில் யார் எதிரிகள் என்பதைத் தெளிவாக அறிவித்த பிறகே களமிறங்கியுள்ளதாகவும், அரசியல் களத்தில் இல்லாதவர்கள் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்துக்குரியதாக அமைந்தன.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் இந்த பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ஒரு கட்சியை தொடங்கிய பின்னர், ஈரோடு கிழக்கு அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு அரசியல் களத்தில் தனது இருப்பை நிரூபித்திருக்கலாம். உண்மையான அரசியல் களத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். விஜய் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை; சிரித்துவிட்டு கடந்து செல்ல வேண்டியதுதான்” என்றார்.

மேலும் அவர், “எந்தக் கட்சியும் கொடியில் வைத்திருக்கும் தலைவர்களுக்காக மக்கள் வாக்களிப்பதில்லை. அதிமுகவில் எம்ஜிஆர், திமுகவில் கருணாநிதி படங்கள் இருந்தாலும், வாக்குகள் அவர்களுக்காக இல்லை. பணத்திற்காக வாக்கு என்றால், காந்தி படம் உள்ள நோட்டுக்கே ஓட்டு போட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது” என விமர்சித்தார்.

தொடர்ந்து, “அரசியல் களத்தில் நேரடியாக இறங்காத ஒருவர், களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாகவே உள்ளது” என சீமான் கருத்து தெரிவித்தார்.