நடிகர் சூரி தற்போது காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘மாமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அவர் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மீனவர்களின் படகுப் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி பேசிய சூரி, “யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. விஜய் அண்ணன் ஒரு உச்சத்தில் இருக்கிறார், சிவகார்த்திகேயன் தம்பி வளர்ந்து வருகிறார்.

எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. அவரவர் வேலையைச் சரியாகச் செய்தால் போதும்” என்று கூறியுள்ளார். மேலும், ‘மண்டாடி’ திரைப்படம் மீனவர்களைப் பற்றி பேசும் வித்தியாசமான கதை என்றும், தனது முழு உழைப்பையும் இதில் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தவிர, இயக்குநர் ராம் உடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாகவும் சூரி கூறியுள்ளார்.