மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வைர வளம் நிறைந்த பகுதியான பன்னாவில், இரண்டு நண்பர்கள் தங்கள் நிதி நெருக்கடியைப் போக்கவும், தங்கள் சகோதரிகளின் திருமணத்துக்குப் பணம் திரட்டவும், குத்தகைக்கு எடுத்த சுரங்கத்தில் சுமார் 15.34 காரட் எடையுள்ள, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வைரத்தைக் கண்டெடுத்துள்ளனர். பன்னாவில் உள்ள ராணிகஞ்சை சேர்ந்த சதீஷ் காதிக் (24) மற்றும் சஜித் முகமது (23) ஆகிய இருவருக்குமான இந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

இதில் சதீஷ் ஒரு சிறிய இறைச்சிக் கடையை நடத்தி வருகிறார். சஜித் பழக் கடையில் வேலை செய்து வருகிறார். “எங்களது முதல் முன்னுரிமை எங்கள் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான்” என்று இந்த இரண்டு நண்பர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சஜித் முகமதுவின் தந்தையும் தாத்தாவும் கூட பல தசாப்தங்களாக இந்தப் பகுதியில் தங்கள் அதிர்ஷ்டத்தை நாடி சுரங்கம் தோண்டி வந்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்குக் குறிப்பிட்ட வெற்றி கிடைக்கவில்லை. “இந்த இரண்டு நண்பர்களும், 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா கல்யாண்பூரில் இந்த விலைமதிப்பற்ற வைரத்தை வெட்டி எடுத்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பன்னா வைர அலுவலகத்தில் அதை ஒப்படைத்தனர். இந்த வைரத்தின் மதிப்பு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று வைர அதிகாரி ரவி படேல் தெரிவித்துள்ளார்.

இந்த விலைமதிப்பற்ற வைரம், அடுத்த ஏலத்தின் போது பொது ஏலத்தில் வைக்கப்படும். வைரங்களின் நகரம் என்று அழைக்கப்படும் பன்னா, பலரது விதியை மாற்றியமைத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 60க்கும் மேற்பட்ட வைரங்கள் பன்னா வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் சுமார் 12 லட்சம் காரட் வைரங்கள் இருப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏலத்தில் உறுதி செய்யப்படும் இறுதி விலையில் 11 சதவீதம் ராயல்டியாகவும், 1 சதவீதம் மூலதன விலக்கு வரியாகவும் மொத்தமாக 12 சதவீதம் அரசுக்குக் கொடுக்கப்படும். மீதமுள்ள தொகை, வைரத்தைக் கண்டெடுத்தவர்களுக்குக் கொடுக்கப்படும்.