தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர், அரசடி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கராசுவின் 12 வயது மகள் தர்ஷிகா, உடல்நலக் குறைவால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று (டிச.3) குடும்பத்தினரின் முறைப்படி மண்ணியாறு இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இடுகாடு வழியாகச் சென்ற சிலர், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் சுமார் 3 அடி ஆழத்திற்குக் குழப்பமான நிலையில் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு, சிறுமியின் உடை மட்டும் வெளியே தெரிவதாகக் கூறி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இடுகாட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, உடல் மாயமாகிவிட்டதாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பகுதியைப் பிரேதப் பரிசோதனைக்காக மேலும் தோண்டிப் பார்த்தபோது, சிறுமியின் உடல் புதைத்த இடத்திலேயே பத்திரமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

“>

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் எப்படிப் புதைக்கப்பட்டதோ அதே நிலையில் இருந்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை மேலும் தோண்டவோ, உடற்கூறாய்வு செய்யவோ வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிகாரிகள் அவர்களிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு குழியை மூடினர். இதுகுறித்து வதந்தி பரப்பியவர்கள் குறித்தும், மண்ணைத் தோண்டியவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.