மகாராஷ்டிரா மாநிலம், தானே (Thane) அருகே உள்ள தேசாய் கிராமத்தில், 22 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து, அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் திணித்துக் கழிமுகப் பகுதியில் வீசிச் சென்ற 50 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட அந்தப் பெண், கொலை செய்த நபருடன் கடந்த 5 ஆண்டுகளாகத் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
கழிமுகப் பகுதியில் மீட்கப்பட்ட சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், அவரது மணிக்கட்டில் ‘BVS’ என்று பச்சை குத்தப்பட்டிருந்ததைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில், கொலை செய்யப்பட்டவர் பிரியங்கா விஸ்வகர்மா (22) என்பதும், அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் துப்பு துலக்கியதில், பிரியங்காவுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த வினோத் சீனிவாஸ் (50) என்பவருக்குச் சந்தேகம் ஏற்படவே, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
நவம்பர் 21 ஆம் தேதி இரவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, ஆத்திரத்தில் பிரியங்காவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வினோத் சீனிவாஸ் ஒப்புக்கொண்டார்.
மறுநாள் இரவு, அழுகிய உடலைச் சூட்கேஸில் அடைத்து வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்ததாகவும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார்.
