கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்த லதா (23) என்பவர் மர்மமான சூழ்நிலையில் மாயமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹன்சின சித்தாபுரா கிராமத்தைச் சேர்ந்த குருராஜ் என்பவருடன் லதாவின் திருமணம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து, குருராஜும் அவரது குடும்பத்தினரும் லதாவை உடல் மற்றும் மனரீதியாகக் கொடுமைப்படுத்தி வந்ததாக லதாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இரண்டு நாட்களாக மகளிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால், லதாவின் பெற்றோர் மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது லதா அங்கு இல்லாதது அவர்கள் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி, லதாவின் செல்போன் சிக்னல் கடைசியாக பத்ராவதி நீர்ப்பாசன கால்வாய் அருகே துண்டிக்கப்பட்டது என்பதை கண்டறிந்தனர்.

அங்கு விசாரணை மேற்கொண்ட போலீசார், கால்வாய் கரையில் லதாவின் செல்போனும் காலணிகளும் கிடந்தன. கைப்பற்றப்பட்ட செல்போனை பரிசீலித்தபோது, “எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமையால் நான் கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என தற்கொலை குறிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகளின் உதவியுடன் நீர்ப்பாசன கால்வாயில் லதாவின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த  பகுதியில் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.