உத்தரபிரதேசம், சந்தௌலி அருகே நடந்த ஒரு கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க மதுபானக் கடைக்கு வெளியே ஏற்பட்ட வாக்குவாதம் உச்சக்கட்டத்திற்கு சென்றதில், இளைஞர் ஒருவர் கூட்டமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இறந்தவர் பியூஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

காட்சிகளில், பலர் சேர்ந்து பியூஷை மீண்டும் மீண்டும் குத்துவதும், ஒருவர் தடிமனான குச்சியால் தொடர்ந்து தாக்குவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பவத்தில் பியூஷின் நண்பர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

ஆரம்பத்தில், இந்த மரணத்தை சாலை விபத்தாக போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிசிடிவி காட்சிகள் வெளிவந்ததையடுத்து, வழக்கு தாக்குதல் மற்றும் கொலைக் குற்றமாக மாற்றப்பட்டது. மொத்தம் ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களில் இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரத்தில், காஜிபூர் கிராமம் அருகே உள்ள கடையில் மதுபானம் குடிப்பது  தொடர்பான விவகாரம் இரண்டு இளைஞர் குழுக்களிடையே தகராறாக மாறி, அதில் ஒருகுழுவினர் பியூஷை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பியூஷ் காயங்களால் உயிரிழந்தார். அவரது தந்தை, “இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகும்; எனது மகனை வேண்டுமென்றே  தாக்கினர்,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.