நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் செயல்பட்டு வரும் ‘லட்சுமி காபி பார்’ என்ற தேநீர் கடை, ஆரம்பத்தில் ₹5-க்கு டீ வழங்கியதால், அப்பகுதியில் ‘5 ரூபாய் டீ கடை’ எனப் பிரபலமாக இருந்தது. இக்கடையில், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (27) என்பவர் தேநீர் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.
இந்தக் காம்ப்ளக்ஸில் கடைகளில் வேலை செய்யும் பெண்களும் பயன்படுத்தி வந்த பொதுக் கழிவறையில், நாகராஜ் சனிக்கிழமை தனது இழிவான செயலை அரங்கேற்றியுள்ளார். கழிவறைக்குச் சென்ற நாகராஜ், தனது செல்போனை ரகசியமாக வீடியோ பதிவு நிலையில் ஆன் செய்து வைத்துவிட்டு வந்துவிட்டார்.
அதன் பிறகு கழிவறைக்குச் சென்ற ஒரு பெண், உள்ளே செல்போனில் வீடியோ பதிவு ஆவதைக் கண்டு அதிர்ச்சியில் உரத்த குரலில் கத்தியுள்ளார். அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அந்தச் செல்போனைக் கைப்பற்றினர். இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட செல்போன் தேநீர் மாஸ்டர் நாகராஜுக்குச் சொந்தமானது என்பதும், அவர் கழிவறைக்குச் சென்ற பெண்களை வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்போனைக் கைப்பற்றி, நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பிரபலமான டீ கடையில் தேநீர் மாஸ்டராகப் பணியாற்றியவரின் இந்தச் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
