கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தந்த துயரமான பாடத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய் முழுவதுமாகக் கற்றுக் கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கரூர் துயரத்தின்போது விஜய் சம்பவ இடத்திற்குத் தாமதமாகச் சென்றதே விமர்சனங்களுக்குக் காரணமாக இருந்தது. இந்நிலையில், இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விஜய், கூட்டம் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்து மக்களைச் சந்தித்தார்.

கரூர் சம்பவத்தின் தாக்கம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, இன்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, குழந்தைகளுடன் வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யாரும் கூட்டத்தில் சோர்வடையாமல் இருக்க, அனுமதி பெற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மேலும், காவல்துறையுடன் இணைந்து தவெகவின் தொண்டர் படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. விஜயின் இந்தக் கவனமான அணுகுமுறை, மக்களுடனான தனது சந்திப்புகளைச் சீராக நிர்வகிக்க அவர் உறுதியாக இருப்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.