மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டம், கோபோலி பகுதியில், பள்ளிச் சீருடை அணிந்த ஒரு சிறுமி, பரபரப்பான சாலையில் ஆட்டோ ரிக்‌ஷாவை அதிவேகமாக ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவின் பின் இருக்கையில் மூன்று முதல் நான்கு பள்ளி மாணவிகள் அமர்ந்திருக்க, முன் இருக்கையில் உண்மையான ஓட்டுநர் அமர்ந்து, அச்சிறுமிக்கு வாகனம் ஓட்டப் பயிற்சி அளித்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

ஆட்டோவிற்குப் பின்னால் ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியதோடு, உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.

“>

இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், இது போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக மீறுவதுடன், பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியது.

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோபோலி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய நியாய சம்ஹிதா (BNS) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.