பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள மக்னார் சமுதாய சுகாதார மையத்தில் (Mahnar Community Health Centre) பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர், காயமடைந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து, அரசியல்ரீதியாகத் தாக்கிப் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு சிகிச்சைக்காகச் சென்ற சுமன் தேவி என்ற பெண்ணிடம், “நீ நிதீஷ் குமாருக்கு ஓட்டுப் போட்டாய், அவரிடமே போய்ச் சிகிச்சை எடுத்துக்கொள்” என்று கூறி, கடமையில் இருந்த மருத்துவர் அலட்சியமாகப் பேசியுள்ளார்.

சிகிச்சை மறுக்கப்பட்டதையடுத்து, வெளியே வந்த சுமன் தேவி, ஊடகங்களிடம் பேசுகையில், “நான் சிகிச்சைக்காக வந்தபோது, அந்த மருத்துவர் என்னைத் தனியாகப் பகைமை பாராட்டுவதுபோல நடத்தினார்.

‘நாங்கள் உனக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. நிதீஷ் குமார் தான் சிகிச்சை அளிப்பார்’ என்று அவர் கூறினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். அனைத்துச் சாதியினருக்கும் அரசுத் திட்டங்களின் பலன் கிடைக்கிறது என்று தான் பதிலளித்த பிறகே, தனக்கு ஒரு ஊசி மட்டும் போடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் ₹10 ஆயிரம் உதவித் திட்டத்தின் மீதுள்ள அரசியல் கோபத்தால் மருத்துவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடியோ வைரலானதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.