உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா (Sonbhadra) மாவட்டத்தில், மனதை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. தன் 10 மாதக் குழந்தையை ஒரு தாய் எரிந்து கொண்டிருந்த சூளையில் (Stove Fire) உயிருடன் போட்டு எரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பப்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோபேதா (Jobedah) கிராமத்தில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது ராஜ்பதி என்ற பெண், தன் கணவர் பதிராஜுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால், தன் தாயார் வீட்டில் தங்கியிருந்தபோது இந்த விபரீதச் செயலைச் செய்துள்ளார். இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், தனியாக இருந்த ராஜ்பதி, தன் 10 மாதக் குழந்தையைச் சூளையின் நெருப்பில் போட்டு எரித்துக் கொன்றுள்ளார்.

அதன் பிறகு, சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூங்கி எழுந்த குடும்பத்தினர், உயிரற்ற தாயின் சடலத்தையும், சூளையில் குழந்தையின் எஞ்சிய பாகங்களையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, ராஜ்பதி இந்த கொடுமையான முடிவை ஏன் எடுத்தார் என்று குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.