பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 55). இவரது கணவர் வேலுச்சாமி என்ற டேவிட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், ராஜலட்சுமி பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு விஜய் (28) மற்றும் மனவளர்ச்சி குன்றிய ஸ்ரீராம் (25) என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில், பி.எஸ்.சி. பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய மகன் விஜய், வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி, மதுபோதைக்கு அடிமையாகி, அடிக்கடி தனது தாயாரிடம் மது குடிக்கப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மகன் விஜயின் தொல்லை தாங்க முடியாமல் ராஜலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன் வேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். எனினும், நேற்று முன்தினம் (நவ. 12) மாலைதான் அவரது பெற்றோர்கள் ராஜலட்சுமியை பண்ருட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த விஜய், தனது தாயார் ராஜலட்சுமியிடம் மீண்டும் மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த விஜய், சமையலறையில் இருந்த மைக்ரோ ஓவனை (Micro Oven) எடுத்து தாயாரின் தலையில் ஓங்கிக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில், ராஜலட்சுமி மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பின்னரும், தாய் என்றும் பாராமல் மைக்ரோ ஓவனால் மீண்டும் மீண்டும் அடித்து தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மகன் விஜய்யை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே கொடூரமாக அடித்துக் கொன்ற இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
