மத்தியப் பிரதேசம், காண்ட்வா மாவட்டத்தில் உள்ள மோகாட் சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஹமத்பூர் கைக்கான் கிராமத்தில், அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பிய இளைஞர், அப்பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினேஷ் பால் என்ற அந்த இளைஞர், விடுமுறை நாளில் வீட்டில் இருந்தபோது, அண்டை வீட்டுப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இதற்குப் பதிலாக, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து, ஒரு எளிய ‘ஹாய்’ மெசேஜை அனுப்பியுள்ளார் தினேஷ். சற்று நேரத்திலேயே, தினேஷ் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அண்டை வீட்டுப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கு வந்து, தினேஷ் பேசியதைக் கேட்காமல், கம்புகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாகத் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் தினேஷுக்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதுடன், கை மற்றும் கால்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு அவர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தினேஷுக்கு எதிராக, தன்னை மனைவியை இன்ஸ்டாகிராமில் துன்புறுத்தியதாகக் கூறி சூரஜ் என்ற நபர் தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு புகார்களையும் பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.