இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை (அக். 30) நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு மாவட்டக் காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும்போது பைக் (இருசக்கர வாகனம்) உட்பட திறந்த நிலை வாகனங்களில் (Open vehicles) வர தடை விதித்து இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவானது, அஞ்சலி செலுத்த வரும்போது ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலையும், பாதுகாப்புக் குறைபாடுகளையும் தவிர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த உத்தரவை மீறி இருசக்கர வாகனங்கள் அல்லது திறந்த நிலை வாகனங்களில் வரும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூடிய வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்த ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.