மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் ஒருவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23-ம் தேதி இரவு சதாரா நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலிருந்து போலீசார் ஒரு தற்கொலைக் குறிப்பு மற்றும் அவரின் உள்ளங்கையில் எழுதப்பட்ட சுவடுகளை மீட்டுள்ளனர்.
அதில், “எனது மரணத்திற்கு காவல் ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த ஐந்து மாதங்களாக உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தி வந்தார்,” என்று எழுதியிருந்தது. இந்த தகவல் வெளிவந்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
தற்கொலைக்கு பல மாதங்களுக்கு முன்பே, கடந்த ஜூன் 19 அன்று, அந்த பெண் மருத்துவர் ஃபல்டான் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அவர்களுக்கு கடிதம் எழுதி, அதில் ஃபல்டான் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் கோபால் பத்னே, துணைக் கோட்ட ஆய்வாளர் பாட்டீல், மற்றும் உதவி ஆய்வாளர் லாட்புத்ரே ஆகியோர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் “நான் கடுமையான மனஅழுத்தத்தில் உள்ளேன். என்னை துன்புறுத்தும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும்,” என்று அவர் கோரியிருந்தார்.
ஆனால், அந்தப் புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்குப் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் நான்கு பக்க தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் வழங்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், மருத்துவ பரிசோதனை செய்யாத பலருக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபின் தன்னை மிரட்டி, துன்புறுத்தியதாகவும், அவர் எழுதியுள்ளார்.
மேலும், ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் தன்னை மிரட்டியதாகவும், அந்த எம்.பி.யுடன் தொலைபேசியில் பேச வைத்ததாகவும், அந்த எம்.பி. மறைமுகமாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த எம்.பி.யின் பெயரை போலீசார் வெளிப்படுத்தவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கல் தொடர்பாக அந்த பெண் மருத்துவருக்கும் சில காவல் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தது என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், உதவி ஆய்வாளர் கோபால் பத்னே, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தற்போது, கோபால் பத்னே தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
