சட்டசபை கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று மீண்டும் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது முதலமைச்சர் அங்கு செல்லவில்லை. ஆனால் கரூரில் சம்பவம் நடந்தவுடன் உடனே சென்றது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் இருந்தனர். ஆனால் கரூரில் மிதிபட்டுக் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள். அதனால்தான் நான் உடனடியாக கரூருக்குச் சென்றேன்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட உடனேயே அதிகாரிகள் சம்பவம் குறித்து பேட்டி அளித்தது ஏன்?” என இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார். அதற்கு நான் விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன் — கரூர் சம்பவம் குறித்து திட்டமிட்டு அரசியலாக்கும் முயற்சிகள் நடந்தன; பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. அவற்றைத் தடுக்கவும் உண்மையான தகவலை மக்களுக்கு தெரிவிக்கவும் தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.” “முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் அதிகாரிகள் செய்தியளித்ததை நாம் பார்த்தோம். அதுபோலவே, கரூர் சம்பவத்திலும் அலுவல் ரீதியாக மட்டுமே அதிகாரிகள் பேசினர்; அரசியல் நோக்கில் அல்ல,” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எழுந்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது: “இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது இதுவரை இல்லை. இது மிகப் பெரிய துயர சம்பவம்,” என்றார். “கரூர் கூட்ட நெரிசல் இடத்துக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க. ஸ்டிக்கர்கள் இருந்தது எப்படி? அரசியல் செய்பவர்கள் யார் என்பதை இதுவே காட்டுகிறது.
நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
39 பேரின் உடல்களுக்கு காலை 8 மணிக்குள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது எப்படி சாத்தியம்? ஒரு உடலைப் பரிசோதிக்க ஒன்றரை மணிநேரம் ஆகும் நிலையில் 8 மணிநேரத்தில் 39 உடல்கள் பரிசோதிக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்புகிறது,” எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “முதலமைச்சர் அமைச்சர்கள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தும் சபாநாயகர் அதை அனுமதிக்காதது ஏன்?” என்றும் கேட்டார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அந்நேரத்தில், கரூர் சம்பவம் தொடர்பாக விவாதிக்கும்போது, சில அமைச்சர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசியதால் அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறு பரபரப்பு நிலவியது. அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, “இன்று அதிமுகவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது போல் தெரிகிறது,” என்று சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாகக் கூறினார். அதேசமயம், துரைமுருகன் “எதை நீக்க வேண்டும் என்று இருக்கையில் அமர்ந்து சொல்லுங்கள்” என அதிமுகவினரை கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், சபாநாயகர் இருக்கையின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி சம்பவ குறிப்பு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும் சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
