2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த இந்தப் பரபரப்பான ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, வெறும் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் வரை, அனைவரும் இந்திய அணியின் அசத்தலான ஆட்டத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த வெற்றி மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பெயரில் ஒரு ஆச்சரியமூட்டும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் பதிவில், பாகிஸ்தான் ஆசியக் கோப்பையை வென்றதாகவும், இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஏவுகணைகளைப் போலவும், பேட்ஸ்மேன்கள் வான்பாதுகாப்பு அமைப்பைப் போலவும் செயல்பட்டதாகவும், டிவியில் ஒளிபரப்பான போட்டி போலியானது என்று ஐசிசி-யிடம் புகார் செய்யப்படும் என்றும் அந்தப் பதிவு கூறியது. இந்த பதிவு @LogicLitLatte என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டு, 9 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது.
Pakistan Prime Minister tweets Pakistan won the Asia Cup
And thanks the Pakistan Army for training players like Haris Rauf.
He blames the ICC for showing fake matches on TV.#AsiaCupFinal pic.twitter.com/4WyrdUg8dM
— Yanika_Lit (@LogicLitLatte) September 28, 2025
ஆனால், இந்த வைரல் பதிவு முற்றிலும் போலியானது என்பது விரைவில் தெரியவந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் இப்படியான எந்தப் பதிவையும் வெளியிடவில்லை. AI சாட்பாட் க்ரோக் இந்தப் பதிவை ஆராய்ந்து, இது முற்றிலும் கற்பனையானது என்று உறுதி செய்தது. பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ கணக்கிலோ அல்லது PMOவிலோ இதுபோன்ற எந்தப் பதிவும் இல்லை. சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் இந்தப் பதிவு போலியானது என்று உடனடியாக சுட்டிக்காட்டினர்.
